என் மீது நம்பிக்கை வை... - பும்ரா உடனான சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த அர்ஷ்தீப் சிங்


என் மீது நம்பிக்கை வை... - பும்ரா உடனான சுவாரஸ்ய நிகழ்வை  பகிர்ந்த அர்ஷ்தீப் சிங்
x

image courtesy: AFP

தினத்தந்தி 16 July 2024 6:43 AM GMT (Updated: 16 July 2024 8:21 AM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து ரிவர்ஸ் ஸ்விங்காவதை பார்த்த பும்ரா அதற்கு தகுந்த பீல்டிங்கை தமக்கு செட்டிங் செய்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.

மும்பை,

ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியினர் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு இந்த தொடர் முழுவதுமே அசத்தலாக இருந்தது. ஒரு பக்கம் பும்ரா தனது திறமையை காண்பிக்க மறுபக்கம் பாண்ட்யாவும் ஆல் ரவுண்டராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

அதேவேளையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் எதிர்பார்ப்பை விட அதிகமாக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்த தொடர் முழுவதுமே அவரது பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. 8 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு டி20 உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பரூக்கியுடன் இணைந்து முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

அந்த வகையில் இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நிகராக அர்ஷ்தீப் சிங் செயல்பட்டதாலேயே இந்தியா கோப்பையை வென்றதாக சில முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து ரிவர்ஸ் ஸ்விங்காவதை பார்த்த பும்ரா அதற்கு தகுந்த பீல்டிங்கை தமக்கு செட் செய்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். இருப்பினும் பந்து அங்கு செல்லாது என்று தாம் நினைத்ததால் அந்த செட்டிங் வேண்டாம் என்று பும்ராவிடம் சொன்னதாகவும் அர்ஷ்தீப் கூறியுள்ளார்.

ஆனால் பும்ரா வற்புறுத்தலாக அதே செட்டிங்கை வைத்த காரணத்தால் அடுத்த சில பந்துகளில் தமக்கு விக்கெட் கிடைத்ததாக அர்ஷ்தீப் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது தான் பும்ராவை நம்ப வேண்டும் என்பதை புரிந்து கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பந்து ரிவர்ஸ் ஸ்விங்கானது. எனவே பீல்டிங்கை மாற்றி டீப் பகுதியில் ஒருவரை நிறுத்துமாறு பும்ரா எனக்கு பரிந்துரைத்தார். ஏனெனில் பந்து திரும்புவதால் பேட்ஸ்மேன் அங்கே அடிப்பார் என்று பும்ரா கணித்தார். இருப்பினும் பந்து அங்கு செல்லாது என்று நான் நினைத்ததால் அதை ஏற்கவில்லை. ஆனால் என்னை நம்பி அந்த பீல்டரை வைக்குமாறு பும்ரா கேட்டுக்கொண்டார்.

எனவே அவரை நம்பிய நான் கொஞ்சம் பந்தை அகலமாக வீசினேன். அந்த பந்து பேட்ஸ்மேனிடம் எட்ஜ் வாங்கிக்கொண்டு பும்ரா சொன்ன அதே பீல்டரை நோக்கிச் சென்றது. அப்போது என் மீது நம்பிக்கை வைத்தால் நல்ல முடிவு தேடி வரும் என்று பும்ரா மீண்டும் சொன்னார். அப்போதுதான் அவர் சொல்வதையெல்லாம் பின்பற்றி என்னுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதை நானும் உணர்ந்தேன்" என்று கூறினார்.


Next Story