டிராவிஸ் ஹெட் விவகாரம்: சிராஜ் உங்களுக்கு மூளை இல்லையா..? ஸ்ரீகாந்த் விளாசல்


டிராவிஸ் ஹெட் விவகாரம்: சிராஜ் உங்களுக்கு மூளை இல்லையா..? ஸ்ரீகாந்த் விளாசல்
x

அடிலெய்டு போட்டியின்போது சிராஜ் - டிராவிஸ் ஹெட் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை,

இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியின் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் அதனை ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். மேலும் அவரை நோக்கி "வெளியே செல்லுங்கள்" என்ற வகையில் சைகை செய்தார். இதனால் அவர்களுக்குள் சிறிது மோதல் ஏற்பட்டது.

அதன் பின் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் "நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்" என்றுதான் சிராஜிடம் தாம் சொன்னதாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் அதை சிராஜ் வேறு விதமாக புரிந்து கொண்டு அப்படி செய்தது ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த சூழ்நிலையில் விக்கெட்டை எடுத்தபோது வெறித்தனமாக கொண்டாடிய தம்மிடம் ஹெட் சில மோசமான வார்த்தைகளை சொன்னதாக முகமது சிராஜ் தெரிவித்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சூழலில் நேற்றைய ஆட்ட நேரத்தில் பேட்டிங் செய்ய வந்த சிராஜ், பீல்டிங் செய்து கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டிடம் நட்பாக சில வார்த்தைகளை பேசினார். இறுதியில் போட்டியின் முடிவிலும் இருவரும் கை கொடுத்து புன்னகையான முகத்துடன் சென்று மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் அந்தப் போட்டியில் 500 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினின் பந்துவீச்சை கூட டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடித்ததாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். அப்படி சிறப்பாக விளையாடிய ஹெட்டை பாராட்டாமல் அவ்வாறு கோபத்துடன் அனுப்பியதற்கு பெயர் ஸ்லெட்ஜிங் கிடையாது என்று சிராஜை அவர் கடுமையாக விளாசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஹெட் நம்முடைய பவுலர்களை இரக்கமின்றி அடித்து நொறுக்கியுள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு எதிராக இப்படி நடந்து கொண்ட சிராஜ் உங்களுக்கு மூளை இல்லையா? என்ன செய்கிறீர்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா? அவர் உங்களை வலது, இடது, மையம் உட்பட அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கினார். 140 ரன்கள் அடித்த அவர் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் சிரமமின்றி அடித்தார்.

அப்படி விளையாடிய பின் நீங்கள் இப்படி அனுப்புவதற்கு பெயர் ஸ்லெட்ஜிங்கா? இது வெறும் குப்பை. இது வெறும் பைத்தியக்காரத்தனம். 140 ரன்கள் அடித்த ஒரு பேட்ஸ்மேனுக்கு நீங்கள் பாராட்டு கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் இப்படி அனுப்புகிறீர்கள்?.

ஒருவேளை நீங்கள் திட்டம் போட்டு அவரை 10 அல்லது 0 ரன்களில் அவுட்டாக்கி இருந்தால் அப்படி செய்யலாம். ஆனால் உங்களை அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 140 ரன்களை குவித்தார். அவர் அஸ்வினை ஒரு ஸ்பின்னராகவே மதிக்காமல் இறங்கி சென்று சிக்சர் அடித்தார்" என்று கூறினார்.


Next Story