இப்போதைய இளம் வீரர்கள் நாட்டுக்காக விளையாட விரும்பவில்லை - முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கவலை


இப்போதைய இளம் வீரர்கள் நாட்டுக்காக விளையாட விரும்பவில்லை - முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கவலை
x

Image Courtesy: AFP

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

புதுடெல்லி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூரு மற்றும் புனேவில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி மும்பையில் நவம்பர் 1ம் தேதி தொடங்குகிறது..

இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு பேட்டிங் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தற்சமயத்தில் டாப் அணியாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமான பங்காற்றி வருகிறது. அதனால் ஒரே சமயத்தில் இந்தியாவுக்காக 2 கிரிக்கெட் அணிகளை விளையாட வைக்கும் அளவுக்கு நிறைய தரமான வீரர்கள் கிடைக்கிறார்கள்.

ஒரு காலத்தில் இந்தியாவுக்கு விளையாட வேண்டுமெனில் முதலில் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் தொடர்ந்து விளையாட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் ஓரிரு வருடங்கள் அசத்தினாலே வாய்ப்பு கிடைக்கிறது. கோடிக்கணக்கில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அதனால் இப்போதுள்ள இளம் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை விட பணத்துக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடினால் போதும் என்று விரும்புவதாக முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக அல்ல. ஒரு 14 – 15 வருடங்களாக அதாவது ஐ.பி.எல் வந்ததிலிருந்து நமது வீரர்களின் மனநிலை மெதுவாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மாறியுள்ளது. அந்த நிலைமை வந்ததிலிருந்தே பெரும்பாலான வீரர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடி எப்படியாவது ஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தியாவுக்காக விளையாட விரும்புவதில்லை. அது மிகப்பெரிய எச்சரிக்கை மணி. கடந்த சில வருடங்களுக்கு முன் அண்டர்-19 உலகக் கோப்பை இந்திய அணியின் முகாமில் கேள்வி ஒன்று கேட்டோம். வருங்காலத்தில் உங்களுடைய இலக்கு என்ன என்பது பற்றி கேட்டோம். அதில் 80 சதவீத வீரர்கள் ஐ.பி.எல் என்று எழுதினார்கள். இந்திய அணிக்கு விளையாடுவதே முதல் இலக்கு என்று பெரும்பாலானவர்கள் தெரிவிக்கவில்லை.

அந்த வகையில் தற்போது அனைத்தும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை நோக்கி நகர்ந்துள்ளது. அதன் காரணமாக சுழல் பந்துகளுக்கு எதிராக விளையாடும் கலையை வீரர்கள் இழந்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய கடினமான கைகளால் லைனில் அதிரடியாக அடிக்க விரும்புகிறார்கள். அதனாலேயே தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்ததை போன்ற முடிவுகளை நாம் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story