டி.என்.பி.எல்.: ஷாருக்கான் அரைசதம்... கோவை கிங்ஸ் 163 ரன்கள் சேர்ப்பு
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மதுரை - கோவை அணிகள் விளையாடி வருகின்றன.
நெல்லை,
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இன்று நடைபெற்று வருகின்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சுஜய் 15 ரன்களிலும், சுரேஷ் குமார் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த முகிலேஷ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே சாய் சுதர்சனும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஷாருக்கான் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினார். மதுரை அணியின் பந்துவீச்சை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர், 26 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் கோவை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 51 ரன்கள் அடித்தார். மதுரை அணியில் அதிகபட்சமாக அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.