தற்போது பாகிஸ்தான் அணியின் திட்டம் இதுதான் - வாசிம் அக்ரம் கிண்டல்


தற்போது பாகிஸ்தான் அணியின் திட்டம் இதுதான் - வாசிம் அக்ரம் கிண்டல்
x
தினத்தந்தி 15 Jun 2024 3:16 PM IST (Updated: 15 Jun 2024 3:44 PM IST)
t-max-icont-min-icon

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருப்பதை அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கிண்டல் செய்திருக்கிறார்.

கராச்சி,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியும், கனடாவுக்கு எதிராக மட்டும் வெற்றியையும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவும் அயர்லாந்தும் மோதிய ஆட்டம் மழையால் ரத்தானதால் அமெரிக்காவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகள் உடன் அமெரிக்க அணி இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றுக்கு சென்று இருக்கிறது. அமெரிக்கா- அயர்லாந்து அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக பலத்த மழை கொட்டியது.

இந்த ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் நிலவியது. மழையால் ஆட்டம் ரத்தானதால் பாகிஸ்தானின் சூப்பர்8 வாய்ப்பு முடிவுக்கு வந்தது. 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல அமெரிக்காதான் தகுதியான அணி என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர்,

"அமெரிக்க அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கிரிக்கெட் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்று நாம் பேசி வருகிறோம். இந்த சூழலில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு அவர்கள் தகுதி பெற்று இருக்கிறார்கள்.

அதிர்ஷ்டத்தால் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லவில்லை. அந்த சுற்றுக்கு செல்வதற்கான அனைத்து தகுதிகளும் அமெரிக்க அணிக்குதான் இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் அணியின் திட்டம் இ கே 601 என்ற விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தை பிடித்து தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதுதான். அதன் பிறகு அங்கிருந்து என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்" என வாசிம் அக்ரம் கிண்டலடித்துள்ளார்.


Next Story