140 கோடி மக்கள் தொகையில் அவர் போல் ஒருவரும் இல்லை - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

image courtesy: PTI
இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
மும்பை,
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்திலும், சென்னையில் நடந்த 2-வது ஆட்டத்திலும், நேற்று முன்தினம் புனேயில் அரங்கேறிய 4-வது ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக ராஜ்கோட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் மட்டும் இங்கிலாந்து 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஹர்திக் பாண்ட்யா (53 ரன்கள்) மற்றும் ஷிவம் துபே (53 ரன்கள்) இணைந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்நிலையில் 140 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லை என்று முன்னாள் வீரர் முகமது கைப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் கடந்த ஐ.பி.எல். தொடரில் ரசிகர்களின் எதிர்ப்பால் வேதனையடைந்த பாண்ட்யா அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
"கடந்த ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்க்கையை பற்றி மக்கள் பேசினார்கள். மும்பையில் அவருக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டார்கள். ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசாத அதே பாண்ட்யாதான் டி20 உலகக்கோப்பை பைனலில் இறுதி ஓவரை வீசி நமது கையில் கோப்பையை பெற்றுக்கொடுத்தார். இந்தியா வென்ற பின் அவர் மனதிலிருந்து நாட்டுக்காக அழுதார்.
ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வென்றபோது கூட அவர் இவ்வளவு உணர்வுகளை காட்டியதில்லை. ஒருநாள் உலகக்கோப்பையில் இதே புனே மைதானத்தில் காயமடைந்த அவருக்கு பதிலான மாற்று வீரர் உங்களிடம் கிடைக்கவில்லை. ஷமி விளையாட வந்தாலும் இந்தியா 7 பேட்ஸ்மேன்கள் 4 பவுலர்களுடன் விளையாடியது. அப்போது 8வது பேட்ஸ்மேன் இல்லை. ஹர்திக் பாண்ட்யா இந்த அணியின் முதுகெலும்பு.
ஏனெனில் காயத்தைச் சந்தித்தபோது அவருக்கான மாற்று வீரர் இல்லை. அணிக்குத் தேவைப்படும்போது ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுக்கும் அவர் டி20 உலகக்கோப்பையில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால் தற்போது அவர் கேப்டனாக இல்லை. அதற்காக மனிதராக இருக்கும் அவர் வருத்தப்பட மாட்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. சொல்லப்போனால் தற்போது அவர் துணைக் கேப்டனாக கூட இல்லை.
தற்போது சூர்யகுமார் கேப்டனாக இருக்கும் நிலையில் பாண்ட்யா தனது வேலையில் சிறந்த செயல்பாடுகளை கொடுத்து வருகிறார். ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் அவர் குஜராத்துக்கு கோப்பையை வென்று கொடுத்தார். எனவே பாண்ட்யா போன்ற வீரர் நம் நாட்டில் இல்லை என்று நினைக்கிறேன். 140 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில் பாண்ட்யா மட்டுமே தற்சமயத்தில் தரமான ஆல் ரவுண்டராக இருக்கிறார்" என்று கூறினார்.