தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; நிசாங்கா அபார ஆட்டம்... 2ம் நாள் முடிவில் இலங்கை 242/3
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 89 ரன்கள் எடுத்தார்.
கெபேஹா,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரிக்கல்டன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். கைல் வெர்ரைன் 48 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னண்டோ 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து இலங்கை தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினர். இதில் கருணாரத்னே 20 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய சண்டிமால் 44 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய பதும் நிசாங்கா அரைசதம் அடித்த நிலையில் 89 ரன்களிலும் அவுட் ஆகினர். தொடந்து ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் காமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் நிதானமாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு ரன்கள் சேர்த்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் மேத்யூஸ் 40 ரன்னுடனும், காமிந்து மெண்டிஸ் 30 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, டேன் பேட்டர்சன், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை இன்னும் 116 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.