வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்... அஸ்வின் படைத்த சாதனைகள்


வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்... அஸ்வின் படைத்த சாதனைகள்
x

image courtesy: @BCCI

தினத்தந்தி 22 Sep 2024 6:41 AM GMT (Updated: 22 Sep 2024 9:25 AM GMT)

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மொத்தமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2வது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்திருந்தது. ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்காளதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதில் ஷகிப் அல் ஹசன் 25 ரன், லிட்டன் தாஸ் 1 ரன், மெஹதி ஹசன் மிராஸ் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷாண்டோ 82 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் புகுந்த தஸ்கின் அகமது 5 ரன், ஹசன் மஹ்மூத் 7 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன் விவரம்;

* சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 522 விக்கெட்டுகளை (இந்த ஆட்டத்தையும் சேர்த்து) வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கோர்ட்னி வாஸ்ஷை (519 விக்கெட்டுகள்) பின்னுக்கு தள்ளி அஸ்வின் 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் (37 முறை), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவின் (37 முறை) சாதனையை சமன் செய்து 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் (67 முறை) முதல் இடத்தில் உள்ளார்.


Next Story