இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அவரை அணியில் சேர்க்காதது குழப்பமாக உள்ளது - இந்திய முன்னாள் வீரர்


இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அவரை அணியில் சேர்க்காதது குழப்பமாக உள்ளது - இந்திய முன்னாள் வீரர்
x

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் துணை கேப்டன் பதவி ஹர்திக் பாண்ட்யாவிடமிருந்து பறிக்கப்பட்டு அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் மீண்டும் டி20 அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்தார். அதன் பிறகு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் இவர் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறுவார் என்று தகவல்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஜெயஸ்வால் இந்த டி20 தொடரில் இடம் பெறாதது தனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜெய்ஸ்வால் இடம்பெறாதது உண்மையிலேயே எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறப்போகும் ஜெய்ஸ்வால் அதற்கு முன்னதாக சில போட்டிகளில் விளையாடியாக வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரே தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பதனால் ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது.

எனவே என்னை பொறுத்தவரை அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் தற்போது அவர் டி20 அணியில் இடம்பெறாததால் அடுத்த 45 நாட்களில் எவ்வித சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் அவர் நேராக சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது" என்று கூறினார்.


Next Story