டி20 உலகக்கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு தொகையை வழங்கியது பி.சி.சி.ஐ.


டி20 உலகக்கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு தொகையை வழங்கியது பி.சி.சி.ஐ.
x
தினத்தந்தி 4 July 2024 10:59 PM IST (Updated: 4 July 2024 10:59 PM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதும் இந்திய அணிக்கு ரூ.125 கோடி வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. முன்பே அறிவித்து இருந்தது.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி, கோப்பையை வென்று அசத்தியது. இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்து உள்ளது.

இதனை தொடர்ந்து, பார்படாஸ் நகரில் புயல் பாதிப்பு மற்றும் வானிலை மோசமடைந்து, அவர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், வானிலை சரியானதும் இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த நிலையிலான பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வெற்றி பேரணியாக வலம் வந்தனர். இதனையடுத்து பேரணி நடைபெறும் இடத்தில் கொட்டும் மழைக்கு இடையே லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்திய அணிக்காக இளைஞர்கள் பாடல்களை பாடியதுடன், பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் போன்ற கோஷங்களையும் எழுப்பினர். இதேபோன்று, மரைன் டிரைவ் பகுதியின் சாலைகளில் இரு புறமும் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை பேரணி நடைபெற்றது. வான்கடே மைதானத்திற்கு வீரர்கள் வந்ததும் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர்.

மும்பையில் பிரமாண்ட அளவில் வீரர்கள் பஸ்சில் பேரணியாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதன்பின் வீரர்களுக்கு ரூ.125 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.

அப்போது இந்திய மூவர்ண கொடியின் நிறத்தின் அடிப்படையில் வீரர்களின் பின்னால் வண்ணபுகை வான் வரை உயர்ந்து பரவ செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றதும் இந்திய அணிக்கு ரூ.125 கோடி வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. முன்பே அறிவித்து இருந்தது.


Next Story