டி20 உலகக்கோப்பை வெற்றி பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் மயக்கம், பலர் காயம்... மும்பை போலீசார் தகவல்


டி20 உலகக்கோப்பை வெற்றி பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் மயக்கம், பலர் காயம்... மும்பை போலீசார் தகவல்
x
தினத்தந்தி 5 July 2024 9:59 AM IST (Updated: 5 July 2024 10:11 AM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களின் வெற்றி பேரணி நேற்று மும்பையில் நடைபெற்றது.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் (ஜூன்) 29ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது.

இந்த வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரை பகுதியில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இந்திய வீரர்களின் பேரணி மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக மும்பை மரைன் டிரைவ் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஊர்வலம் தொடங்க தாமதம் ஆனதால், தெற்கு மும்பை போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

காலதாமதம் ஆனாலும் ரசிகர்கள் கூட்டம் துளி கூட குறையவில்லை. இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உள்பட 2 பேர் மயக்கமடைந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மும்பை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story