டி20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
தரோபா,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் இன்று (இந்திய நேரப்படி நள்ளிரவு) நடந்த 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியாவுடன்(சி பிரிவு) மோதியது.
மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பப்புவா நியூ கினியா முதலில் பேட்டிங் செய்தது.
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவம் இல்லாத பப்புவா நியூ கினியா அணி, வலுவான நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க திணறியது. நியூசிலாந்தின் அபார பந்துவீச்சால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை.
இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.