டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் இன்று மோதல்
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
தரோபா,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியா அணியை (சி பிரிவு) எதிர்கொள்கிறது.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஒரு வெற்றி (உகாண்டாவுக்கு எதிராக), 2 தோல்வி (ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) என 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. பப்புவா அணி 3 ஆட்டங்களிலும் தோற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் இதுவே தனது கடைசி டி20 உலகக் கோப்பை என்று அறிவித்து இருப்பதால், அவரை வெற்றியுடன் வழியனுப்ப நியூசிலாந்து அணி தீவிர முனைப்பு காட்டும். மற்றபடி அறிமுக அணியான பப்புவா நியூ கினியா 20 ஓவர் முழுமையாக தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கும்.
இதே நாளில் செயின்ட் லூசியாவில் நடைபெறும் 40-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றை உறுதி செய்து விட்ட வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் (சி பிரிவு) மோதுகின்றன. இந்த ஆட்டம் உள்ளூர் நேரத்துக்கு இரவில் தொடங்கினாலும் இந்திய நேரப்படி மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கே தெரியும். இத்துடன் லீக் போட்டி முடிவடைகிறது. சூப்பர் 8 சுற்று வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.