தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; புதிய தலைமை பயிற்சியாளருடன் களம் இறங்கும் இந்தியா..?
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நவம்பர் 1ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.
இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சீனியர் வீரர்கள் செல்ல உள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரின் ஆட்டங்கள் முறையே டர்பன், க்கெபர்ஹா, செஞ்சுரியன், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணன் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக கவுதம் கம்பீர் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், வி.வி.எஸ்.லட்சுமணன் உடன் சாய்ராஜ் பஹுதுலே, ஹ்ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் சுபதீப் கோஷ் ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி விவரம்; சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.