நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறும் தென் ஆப்பிரிக்கா


நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறும் தென் ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 8 Jun 2024 10:32 PM IST (Updated: 8 Jun 2024 11:30 PM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா திணறி வருகிறது.

நியூயார்க்,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் டி பிரிவில் இன்று நடைபெற்று வரும் 16வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - தென் ஆப்பிரிக்கா மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் இங்கல்பிரிசெட் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணியின் பிரீட்மென் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் குவிண்டன் டிகாக் ஆட்டத்தின் முதல் பந்திலேயே (0 ரன்கள்) ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் 3 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்) கேட்ச் மூலம் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கிளாசன் 4 ரன்னில் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா 4.3 ஓவரில் 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து, ஸ்டப்ஸ் உடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர். ஸ்டப்ஸ் 7 ரன்னிலும், மில்லர் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தென் ஆப்பிரிக்கா 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 72 பந்துகளில் 82 ரன்கள் எடுக்க வேண்டும். அதேவேளை, இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்தும் விளையாடி வருகிறது. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.


Next Story