நாட்டுக்காக தோட்டாக்களை தோளில் வாங்கிக் கொள்ளுங்கள் - கம்பீரின் ஆலோசனையை பகிர்ந்த நிதிஷ்
ஆஸ்திரேலியாவில் பவுலர்கள் பவுன்சர் பந்துகளை வீசி தாக்குவார்கள் என்று கம்பீர் கூறியதாக நிதிஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - அறிமுக வீரர் நிதிஷ் ரெட்டி இணை இந்திய அணியை 100 ரன்களை கடக்க உதவியது. இவர்களில் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்த பின் நிதிஷ்குமார் அதிரடியாக ஆடினார். அணிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய நிதிஷ்குமார் 41 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 49.4 ஓவர்களில் 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்சில் தடுமாறி வருகிறது. 9 விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி 92 ரன்களுடன் போராடி வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் எதிரணி பவுலர்கள் கடுமையான பவுன்சர் பந்துகளை வீசி தாக்குவார்கள் என்று பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்ததாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார். அது போன்ற பந்துகளை நாட்டுக்காக நெஞ்சில் தோட்டாவை ஏந்துவது போல தாங்கிக் கொள்ளுமாறு கம்பீர் தமக்கு ஆலோசனை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பெர்த் மைதானத்தை பற்றி நானும் நிறைய கேள்வி பட்டுள்ளேன். இங்கே பயிற்சி எடுத்தபோது கம்பீருடன் நாங்கள் பேசினோம். அப்போது நீங்கள் கடுமையான பவுன்சர்கள் அல்லது கூர்மையான பந்துகளை எதிர்கொள்ளும்போது அதை தோளில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர் சொன்னார். அதை உங்களுடைய நாட்டுக்காக தோட்டாவை ஏற்றுக்கொள்வது போல் உணருங்கள் என்று கம்பீர் சொன்னார்.
அது எனக்கு நிறைய உதவி செய்தது. நிறைய உத்வேகத்தை கொடுத்தது. பெர்த் மைதானத்தில் அதிகப்படியான வேகம் இருக்கும் என்று அனைவரும் பேசினார்கள். அதைக் கேட்டபோது நாட்டுக்காக நாம் தோட்டாக்களை ஏந்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பது போல் உணர்ந்தேன். அதுதான் கம்பீர் சாரிடம் இருந்து நான் கேட்ட சிறந்த ஆலோசனை" என்று கூறினார்.