பும்ராவை சமாளித்து தொடரை வெல்ல தயார் - ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் நம்பிக்கை


பும்ராவை சமாளித்து தொடரை வெல்ல தயார் - ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் நம்பிக்கை
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 8 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த 2வது போட்டியில் பும்ராவிற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணியினர் தயாராக உள்ளதாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதே போல ஹர்ஷித் ராணா, சிராஜ் போன்ற பவுலர்களையும் அதிரடியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்பிரித் பும்ரா நீண்ட வருடங்களாக சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். எங்களுடைய உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அவரைப் போன்றவரை எதிர்கொள்ள எப்போதும் தீர்வுகளை கண்டறிவார்கள். தற்போது நாங்கள் அவரது பந்துவீச்சை நன்றாக ஆராய்ந்துள்ளோம். அதனால் இம்முறை அவரது பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்வோம் என்று நம்புகிறோம்.

அதே போல பழைய பந்தில் அவரை இன்னும் நாங்கள் நன்றாக எதிர்கொள்வோம். பும்ரா மட்டுமின்றி இந்தியாவின் மற்ற பவுலர்களுக்கு எதிராகவும் நாங்கள் தகுந்த திட்டங்களை வைத்துள்ளோம். ஹெட், மார்ஷ், நான் போன்ற எங்களுடைய பேட்ஸ்மேன்கள் களத்தில் அவர்களுக்கு எதிராக வலுவான நோக்கத்துடன் விளையாடுவோம்.

அது தான் எங்களுடைய ஸ்டைல். அதே சமயம் அழுத்தங்களையும் உள்வாங்கி நாங்கள் விளையாடுவதற்கு வாய்ப்பு இருக்கும். எனவே இப்போதும் நாங்கள் இந்தத் தொடரை வெல்லும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். அடிலெய்ட் மைதானத்தில் தற்போது எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது" என்று கூறினார்.


Next Story