ரஞ்சி டிராபி; தமிழகம் - அசாம் ஆட்டம் டிரா


ரஞ்சி டிராபி; தமிழகம் - அசாம் ஆட்டம் டிரா
x

Image Courtesy: @assamcric / X (Twitter)

தமிழகம் தரப்பில் 2வது இன்னிங்சில் ஜெகதீசன் 118 ரன்கள் எடுத்தார்.

கவுகாத்தி,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் 4வது லீக்கில் கவுகாத்தியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம் - அசாம் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் 338 ரன்கள் எடுத்தது. தமிழகம் தரப்பில் விஜய் சங்கர் 76 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அசாம் 445 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக அசாம் அணி 107 ரன்கள் முன்னிலை பெற்றது. அசாம் தரப்பில் அதிகபட்சமாக டேனிஷ் தாஸ் 109 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 107 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழகம் நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. தமிழகம் தரப்பில் சுரேஷ் லோகேஷ்வர் 2 ரன்னுடனும், ஜெகதீசன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 4வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் 60 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 217 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிரா ஆனது. தமிழகம் தரப்பில் 2வது இன்னிங்சில் ஜெகதீசன் 118 ரன்கள் எடுத்தார். பி.சி.சி.ஐ விதிமுறைப்படி இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் அசாம் முன்னிலை பெற்றது. அதன் காரணமாக அசாம் அணி மூன்று புள்ளிகளை பெற்றது. மறுபுறம் தமிழ்நாடு அணி 1 புள்ளி மட்டுமே பெற்றது.

இந்தப் போட்டியின் முடிவில் எலைட் குரூப் டி பிரிவில் தமிழ்நாடு மொத்தம் 4 போட்டிகளில் 1 வெற்றியுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. அதனால் தமிழ்நாடு அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் 2 இடங்களில் சண்டிகர் மற்றும் ரெயில்வேஸ் அணிகள் உள்ளன. இதையடுத்து தமிழக அணி அடுத்தப் போட்டியில் நவம்பர் 13-ம் தேதி ரெயில்வேஸ் அணியை எதிர்கொள்கிறது.


Next Story