ரஞ்சி டிராபி; தமிழகத்திற்கு எதிராக ரெயில்வே அணி நிதான ஆட்டம்...3ம் நாள் முடிவில் 169/5


ரஞ்சி டிராபி; தமிழகத்திற்கு எதிராக ரெயில்வே அணி நிதான ஆட்டம்...3ம் நாள் முடிவில் 169/5
x

கோப்புப்படம்

தமிழகம் தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அகமதாபாத்,

90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் 5வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி ரெயில்வே அணியை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், லக்சய் ஜெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் 438 ரன்கள் குவித்தது.

தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது அலி 91 ரன்கள் எடுத்தார். ரெயில்வே தரப்பில் குனால் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் தமிழக அணி 209 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து ரெயில்வே தனது 2வது இன்னிங்சை ஆடியது. ரெயில்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதாம் சிங் மற்றும் விவேக் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பிரதாம் சிங் டக் அவுட் ஆனார். தொடர்ந்து சூரஜ் அகுஜா களம் இறங்கினார். சூரஜ் அகுஜா - விவேக் சிங் இணை நிதானமாக ஆடியது. இதில் விவேக் சிங் அரைசதம் அடித்த நிலையில் 63 ரன்னிலும் சூரஜ் அகுலா 36 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து முகமது சைப் மற்றும் உபேந்திர யாதவ் ஜோடி சேர்ந்தனர். இதில் முகமது சைப் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தன.

இதில் உபேந்திர யாதவ் 1 ரன், பார்கவ் மேராய் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர், மறுபுறம் முகமது சைப் அரைசதம் அடித்தார். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ரெயில்வே அணி தனது 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது. ரெயில்வே தரப்பில் முகமது சைப் 52 ரன்னுடனும் ஷிவம் சவுத்ரி 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழகம் தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரெயில்வே அணி இன்னும் 40 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story