ரஞ்சி டிராபி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்... 3ம் நாள் முடிவில் முன்னிலை பெற்ற அசாம்
தமிழகம் தரப்பில் சுரேஷ் லோகேஷ்வர் 2 ரன்னுடனும், ஜெகதீசன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கவுகாத்தி,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் 4வது லீக்கில் கவுகாத்தியில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம் - அசாம் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் 338 ரன்கள் எடுத்தது. தமிழகம் தரப்பில் விஜய் சங்கர் 76 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அசாம் நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 176 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த அசாம் தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக அசாம் அணி 107 ரன்கள் முன்னிலை பெற்றது. அசாம் தரப்பில் அதிகபட்சமாக டேனிஷ் தாஸ் 109 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 107 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழகம் இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழகம் தரப்பில் சுரேஷ் லோகேஷ்வர் 2 ரன்னுடனும், ஜெகதீசன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி இன்னும் 99 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.