ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு - டெல்லி ஆட்டம் டிரா


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு - டெல்லி ஆட்டம் டிரா
x

image courtesy: twitter/ @BCCIdomestic

ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு - டெல்லி இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

புதுடெல்லி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடு - டெல்லி இடையிலான ஆட்டம் (டி பிரிவு) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சாய் சுதர்சன் இரட்டை சதம் நொறுக்கினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டெல்லி அணியில் யாஷ் துல் நிலைத்து நின்று ஆட, இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. அந்த அணி 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்திருந்தது. யாஷ் துல் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார். தமிழகம் தரப்பில் குர்ஜப்னீத் சிங், முகமது, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்சில் மேற்கொண்டு 2 ரன்கள் அடித்த நிலையில் 266 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.

அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி கடைசி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.


Next Story