ராகுலா...அக்சர் படேலா...டெல்லி அணியின் கேப்டன் யார்...? - இணை உரிமையாளர் கொடுத்த தகவல்


ராகுலா...அக்சர் படேலா...டெல்லி அணியின் கேப்டன் யார்...? - இணை உரிமையாளர் கொடுத்த தகவல்
x

கோப்புப்படம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி அணி கே.எல். ராகுலை வாங்கி உள்ளது.

ஜெட்டா,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.

ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. டெல்லி அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட்டை விடுவித்தது. இதையடுத்து அந்த அணியின் அடுத்த கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் டெல்லி அணி லக்னோவின் முன்னாள் கேப்டனாக ராகுலை வாங்கியது.

இதையடுத்து டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், ராகுலை வாங்கிய பின்னர் டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் டாப் ஆர்டரில் நிலைத்தன்மையை எதிபார்த்து கொண்டிருந்தோம். இன்னிங்ஸை எடுத்து செல்லக்கூடிய அனுபவமுள்ள ஒருவர் எங்களுக்கு தேவைப்பட்டார். அதற்காக கே.எல்.ராகுலை எடுத்துள்ளோம். கே.எல்.ராகுல் ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலும் தொடர்ந்து 400 ரன்களுக்கு மேல் கொடுத்த ஒருவர் என்று நான் நினைக்கிறேன்.

மேலும், கோட்லா விக்கெட் அவரது ஆட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன். அவரைப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், எங்களிடம் மிகவும் இளம் பேட்டிங் வரிசை உள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் இருவரும் அவர்களை வழிநடத்தப் போகிறார்கள். கே.எல்.ராகுலின் பேட்டிங்கும் அனுபவமும் சக்கரத்தில் ஒரு முக்கிய கோலாக இருக்கும்,

நாளை (இன்று) மேலும் இரண்டு பந்துவீச்சாளர்களைத் தேடுகிறோம். பந்துவீச்சு தாக்குதல் மிகவும் வலுவாக இருக்கும் என நினைக்கிறேன். பேட்டிங்கும் வலுவாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, இது மிகவும் போட்டி நிறைந்த அணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story