பெர்த் டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்தியா.. தத்தளிக்கும் ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே பும்ரா செக் வைத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆன மெக்ஸ்வீனியை டக் அவுட்டில் வீழ்த்தினார். இதனையடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கம்மின்சை சிராஜ் அவுட்டாக்கினார். மேலும் பும்ரா அடுத்த ஓவரிலேயே லபுசாக்னேவை வீழ்த்த அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. உஸ்மான் கவஜா 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இத்தகைய சூழலில் நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.