சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொண்டு செல்ல பாகிஸ்தானுக்கு தடை


சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொண்டு செல்ல பாகிஸ்தானுக்கு தடை
x

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு ஜெய் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடமான துபாய்க்கு மாற்ற வேண்டும் என்று பி.சி.சி.ஐ.கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை. கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வரவில்லை என்றால் போட்டியை நடத்துவதை கைவிடுவதுடன், போட்டியில் இருந்து விலகுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான சுற்றுப்பயணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தொடங்கவுள்ளது. நவம்பர் 16-ம் தேதி இஸ்லாமாபாத் நகரில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பயணம், பல்வேறு நகரங்களுக்கும் செல்லவுள்ளது. அதில் குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான ஸ்கார்டு, முர்ரி, மற்றும் முசாபராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்து.

இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. தரப்பில் உடனடியாக ஐ.சி.சி. யிடம் முறையிடப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரடியாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மீது புகார் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பயணத்தை ரத்து செய்து ஐசிசி அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு ஜெய் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story