சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்; டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஷாய் ஹோப் சதம் அடித்து அசத்தினார்.
ஆண்டிகுவா,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 31ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 328 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 117 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜான் டர்னர், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 329 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து 47.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 329 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய லியாம் லிவிங்ஸ்டன் சதம் (124 ரன்கள்) அடித்து அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போர்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்தின் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி வரும் 6ம் தேதி பார்படாஸில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஷாய் ஹோப், முன்னாள் வீரரான டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் (17 சதம்) சாதனையை ஷாய் ஹோப் (17 சதம்) சமன் செய்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியல்;
கிறிஸ் கெய்ல் - 25 சதம்
பிரையன் லாரா - 19 சதம்
டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் - 17 சதம்
ஷாய் ஹோப் - 17 சதம்