கே.எல்.ராகுல் அல்ல... டெல்லி அணியின் கேப்டனாக இவரை நியமிக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள ராகுல், அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் ஆகியவை சமீபத்தில் நடந்தது. இந்த ஏலத்தில் கே.எல்.ராகுல் இடம் பெற்றிருந்தார். அவரை டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது லக்னோ அணியின் கேப்டனான லோகேஷ் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அவர் லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று கருத்துகள் நிலவின.
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள ராகுல், அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்திய அணிக்காக ஆல் ரவுண்டராக விளையாடி 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவிய அக்சர் படேல் டெல்லியை வழி நடத்துவதற்கு சரியானவர் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, டெல்லி அணியின் கேப்டன் யார்..?. கொல்கத்தா போலவே அவர்களுடைய நிலைமையும் இருக்கிறது. அது அக்சர் பட்டேலாக இருக்கக்கூடும். அவரை கேப்டனாக நியமிக்க நான் தயங்க மாட்டேன். ஒருவேளை எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் அவரை கேப்டனாக நியமிப்பேன். ஏனெனில் அண்டர்ரேட்டட் வீரரான அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர்.
அணியை நன்றாக வழி நடத்தும் திறமையும் அவரிடம் இருக்கிறது. அவர் அணி வீரர்களிடம் மரியாதையும் பெறக்கூடியவர். கேஎல் ராகுல் மற்றொரு ஆப்ஷன். டு பிளேஸிஸ் மூன்றாவது தேர்வாக இருக்கலாம். ஜேக் பிரேசரை டெல்லி ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கியுள்ளதால் டு பிளேஸிஸை டெல்லி அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே துவக்க வீரராக பயன்படுத்த வாய்ப்பு குறைவு.
எனவே அக்சர் பட்டேல் மற்றும் ராகுல் ஆகியோருக்கு இடையே தான் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர் இருப்பார்கள். களத்தில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதன் காரணமாக என்னுடைய தேர்வு அக்சர் பட்டேலாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.