கிரிக்கெட் மட்டுமல்ல... அனைத்து விளையாட்டுகளையும் சமமாக நடத்துங்கள் - சிராக் ஷெட்டி ஆதங்கம்


கிரிக்கெட் மட்டுமல்ல... அனைத்து விளையாட்டுகளையும் சமமாக நடத்துங்கள் -  சிராக் ஷெட்டி ஆதங்கம்
x
தினத்தந்தி 8 July 2024 4:24 PM GMT (Updated: 8 July 2024 4:29 PM GMT)

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை அரசு கவுரவிக்கும்போது தங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி கூறியுள்ளார்.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்கள் மரைன் டிரைவ் பகுதியிலிருந்து வான்கடே மைதானம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி பேரணி சென்றனர்.

கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.11 கோடி பரிசுத் தொகை அறிவித்தது.

இந்த நிலையில் இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி மகாராஷ்டிரா அரசு விளையாட்டுகளில் பாரபட்சம் காட்டுகிறது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தாமஸ் டிராபி என்பது உலகக் கோப்பை டிராபியை வெல்வதற்கு சமமானது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தாமஸ் டிராபியில் இந்திய அணி முதல் முறையாக டைட்டில் வென்றது. இதில், இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்திய இந்திய பேட்மிண்டன் அணியில் நானும் ஒருவராக இருந்தேன். நான் மட்டுமே மகாராஷ்டிரா வீரர். டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற கிரிக்கெட் நட்சத்திரங்களை மாநில அரசு கௌரவிக்கும் போது எனது முயற்சியையும் அரசு அங்கீகரித்திருக்க வேண்டும்.

கிரிக்கெட் மட்டுமின்றி எல்லா விளையாட்டுகளையும் அரசு சமமாக நடத்த வேண்டும். மேலும், நான் கிரிக்கெட்டிற்கு எதிரானவன் அல்ல. உண்மையில் பேட்மிண்டன் வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை டிவியில் பார்த்து உற்சாகமாக கொண்டாடினோம். அதோடு, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான வெற்றியால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆனால், நாங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வெற்றியை பதிவு செய்தோம். மாநில அரசு கௌரவிக்கவும் இல்லை. பாராட்டி பரிசும் வழங்கவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டிற்கு முன்பு இந்திய அணி பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிக்கு கூட சென்றதில்லை. ஆனால், நாங்கள் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தோம்" என்று கூறினார்.


Next Story