பும்ரா மட்டுமல்ல..யார் பந்து வீசினாலும் அடிப்பேன் - குர்பாஸ்


பும்ரா மட்டுமல்ல..யார் பந்து வீசினாலும் அடிப்பேன் - குர்பாஸ்
x

image courtesy: AFP

தினத்தந்தி 20 Jun 2024 3:20 PM IST (Updated: 20 Jun 2024 4:10 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அணியின் முதன்மை பவுலரான ஜஸ்பிரித் பும்ரா மட்டுமின்றி யார் போட்டாலும் அடிப்பேன் என்று குர்பாஸ் தெரிவித்துள்ளார்.

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 3-வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இதில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருக்கும் இந்தியா இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் தோற்றதில்லை. எனவே இம்முறையும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீப காலங்களில் மிகப்பெரிய எழுச்சி கண்டுள்ள ஆப்கானிஸ்தான் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நடப்பு தொடரிலும் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து லீக் சுற்றுடன் வெளியேற முக்கிய காரணமாக அமைந்தது. எனவே இந்த போட்டியில் வென்று, இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்க அந்த அணி முழு மூச்சுடன் போராட உள்ளது. மேலும் அந்த அணியில் உள்ள பல வீரர்கள் இந்திய வீரர்களுடன் ஐ.பி.எல். தொடரில் விளையாடி உள்ளதால் அந்த அனுபவம் அவர்களுக்கு வலு சேர்க்கும்.

இந்நிலையில் இந்திய அணியின் முதன்மை பவுலரான ஜஸ்பிரித் பும்ரா மட்டுமின்றி தம்முடைய இடத்தில் யார் போட்டாலும் அடிப்பேன் என்று ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் சாம்பியன் அணியை போன்ற மனநிலையுடன் ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடுவதே தங்களுடைய லட்சியம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியுள்ளது பின்வருமாறு:- "உண்மையில் பும்ரா மட்டும் என்னுடைய இலக்கு கிடையாது. பும்ராவை தாண்டி நான் அனைத்து பவுலர்களையும் டார்கெட் செய்வேன். ஏனெனில் 5 பவுலர்கள் பந்து வீசுவார்கள். நான் அவர்கள் அனைவரையும் எதிர்கொள்வேன். பும்ராவை தாண்டி வேறு ஏதேனும் பவுலர் கூட என்னை அவுட்டாக்கலாம். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இடத்தில் பந்து வீசினால் பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் போன்ற யாரை வேண்டுமானாலும் அடிப்பேன். ஒன்று அவுட்டாவேன் அல்லது அவர்களை நான் அடிப்பேன். இதற்கு முன் உலகக்கோப்பைகளில் விளையாடிய நாங்கள் இப்போதும் விளையாடுகிறோம்.

ஆனால் முன்னர் உலகக்கோப்பையில் விளையாடினால் போதும் என்று நாங்கள் நினைப்போம். ஆனால் இம்முறை நாம் சாம்பியனாக செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய மிகப்பெரிய மனநிலையாகும். நாங்கள் சாம்பியனாக சாதனை படைப்பதில் எந்த அழுத்தமும் கிடையாது. எங்கள் மீது எதிர்பார்ப்புகளும் கிடையாது. நாங்கள் ஒரு சமயத்தில் ஒரு போட்டியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் முதலில் அரையிறுதிக்கு தகுதி பெற்று பின்னர் இறுதிப்போட்டியில் விளையாடுவோம் என்ற எங்களுடைய லட்சியத்தை அடைவோம் என்று நம்புகிறேன்" என கூறினார்.


Next Story