நோமன் அலி - சஜித் கான் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து 112 ரன்களில் ஆல் அவுட்


நோமன் அலி - சஜித் கான் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து 112 ரன்களில் ஆல் அவுட்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 26 Oct 2024 12:20 PM IST (Updated: 26 Oct 2024 12:40 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.

ராவல்பிண்டி,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 68.2 ஓவர்களில் 267 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி சுமித் 89 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 344 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 134 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரெஹான் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 77 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ரூட் 5 ரன்களுடனும், ஹாரி புரூக் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியினர், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் புரூக் 26 ரன், ரூட் 33 ரன், ஸ்டோக்ஸ் 3 ரன், ஜேமி ஸ்மித் 3 ரன், அட்கின்சன் 10 ரன், ரெஹான் அகமது 7 ரன், ஜேக் லீச் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதன் காரணமாக இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சில் 37.2 ஓவர்களில் 112 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 36 ரன் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.


Next Story