இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது - ஆகாஷ் சோப்ரா
சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் இந்தியா வெல்லும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை,
ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலைமையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகள் முறையே டாப் 5 இடங்களில் உள்ளன. அதில் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 2025 ஜூன் 11ஆம் தேதி லண்டனில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போராட உள்ளன.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்காளதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. அதில் சொந்த மண்ணில் நடைபெறும் வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் இந்தியா வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அதனால் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஓரிரு போட்டிகளை வென்றாலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியா மிகவும் வேகமாக தொடர்ந்து 3வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நோக்கி செல்கிறது. சொல்லப்போனால் தற்சமயத்தில் நாம் டேபிள் டாப்பராக சென்று கொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு இன்னும் 10 போட்டிகள் எஞ்சியுள்ளன. அந்த 10 போட்டிகளிலும் வென்றால் 85 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடிக்கும். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் நாம் ஓரிரு டெஸ்ட் போட்டிகளை வென்றால் கூட நாம் பைனல் வாய்ப்பை பெறுவோம். ஏனெனில் வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நாம் நன்றாக செயல்படுவோம் என்று எதிர்பார்க்கிறோம். அந்தத் தொடர்களில் நாம் வெற்றிகளை தவறவிடவில்லை என்றால் கண்டிப்பாக பைனல் செல்வோம்.
இந்தியாவைத் தொடர்ந்து நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வலுவான அணியாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் 2 தொடர்கள் உள்ளன. ஒன்று இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள். மற்றொன்று இலங்கை மண்ணில் நடைபெறும் தொடராகும். ஒருவேளை இந்தியாவை அவர்கள் 4 - 1 என்ற கணக்கில் தோற்கடித்தால் பைனலுக்கு தகுதி பெறுவார்கள். ஒருவேளை தங்களுடைய அடுத்த 7 போட்டிகளையும் வென்றால் அவர்கள்76.30 சதவிகித புள்ளிகளுடன் தகுதி பெறுவார்கள். அதைத் தொடர்ந்து இலங்கை, இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு பைனல் செல்ல கொஞ்சம் குறைவான வாய்ப்புகளே உள்ளன. தற்போதைய நிலையில் வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் பைனலுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக தெரிகிறது" என்று கூறினார்.