பண்ட், ரகானே இல்லை.. 2020 -21 தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு உண்மையான காரணம் அவர்தான் - டிம் பெய்ன்


பண்ட், ரகானே இல்லை.. 2020 -21 தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு உண்மையான காரணம் அவர்தான் - டிம் பெய்ன்
x

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 -21 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றியது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

குறிப்பாக 36க்கு ஆல் அவுட்டான இந்தியா முதல் போட்டியிலேயே வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் வெகுண்டெழுந்த இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த 2 தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.

முன்னதாக அத்தொடரில் காபாவில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் 89 ரன்கள் குவித்தார். அதனால் வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய அவர் காபா மைதானத்தில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சரித்திர வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அதனால் 2020 - 21 பார்டர் - கவாஸ்கர் கோப்பை மற்றும் காபா மைதானத்தில் பெற்ற வெற்றிக்கு ரிஷப் பண்ட்டை அனைவரும் அதிகம் பாராட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உண்மையாகவே அந்தத் தொடரை இந்தியா வெல்வதற்கு புஜாராதான் முக்கிய காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றியதாக நிறைய மக்கள் பேசியதை நினைவில் வைத்துள்ளேன். ஆனால் அந்தத் தொடரை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர் புஜாரா. அவர் எங்களை வீழ்த்தினார். அவர் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை வீழ்த்தினார். தன்னுடைய உடலில் நிறைய அடிகளை வாங்கிய அவர் தொடர்ந்து எழுந்து நின்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அது போன்ற ஆட்டத்திற்கு இன்னும் இடம் இருக்கிறது" என்று கூறினார்.


Next Story