மெல்போர்ன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - பிட்ச் பராமரிப்பாளர்
மெல்போர்ன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் மேட் பேஜ் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெல்போர்னில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், மெல்போர்ன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் மேட் பேஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிட்ச் ஒதுக்கீட்டில் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளன. எங்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஆடுகளத்தை தயார்படுத்தி கொடுக்கிறோம். இதன்படி இன்று (நேற்று) தான் புதிய ஆடுகளங்கள் தயாராக உள்ளன. ஒரு வேளை அணிகள் அதற்கு முன்பே இங்கு வந்து விளையாடினால், எங்கள் வசம் என்ன ஆடுகளம் உள்ளதோ அதைத் தான் வழங்க முடியும்.
7 ஆண்டுக்கு முன்பு, இங்கு (மெல்போர்ன்) பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளத்தை பயன்படுத்தினோம். அந்த போட்டிக்கு (டிராவில் முடிந்தது) பிறகு அது பற்றி விவாதித்த நாங்கள், டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பும், திரில்லிங்கும் நிறைந்ததாக இருக்கும் வகையில் ஆடுகளத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தோம். ஆடுகளம் பவுலர்களுக்கு உதவ வேண்டும். அதே சமயம் நன்றாக ஆடும் போது பேட்ஸ்மேன்களின் கையும் ஓங்க வேண்டும். இத்தகைய ஆடுகளத்தை தான் தற்போது அமைக்கிறோம்.
வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் ஒத்துழைக்கும் வகையில் 6 மில்லிமீட்டர் அளவுக்கு புற்களை விட உள்ளோம். அதே சமயம் பந்து பழசான பிறகு பேட்டிங்குக்கு நன்றாக கைகொடுக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு வந்து பந்து வீசுவது உற்சாகமாக இருக்கும். ஆனால் பெர்த், பிரிஸ்பேன் ஆடுகளங்கள் போன்று அதிவேகம் இருக்காது என்றாலும், ஓரளவு வேகம் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.