நான் 6-7 மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என்று பலரும் கூறினார்கள்.. ஆனால்.. - பும்ரா


நான் 6-7 மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என்று பலரும் கூறினார்கள்.. ஆனால்.. - பும்ரா
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

முன்னதாக முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோகித் விலகிய நிலையில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். தற்போது ரோகித் தலைமையில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

அதன் காரணமாக பும்ராவை மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக கொண்டு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேப்டனாக மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்திய அவர் முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தினார்.

அந்தளவுக்கு வித்தியாசமான ஆக்சனை பயன்படுத்தி தனித்துவமாக பந்து வீசும் அவர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். அதனால் அவரை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக சுமித், ஹெட் போன்ற எதிரணி வீரர்களே பாராட்டுகிறார்கள்.

இந்நிலையில் 16 - 17 வயதில் கிரிக்கெட்டை விளையாட தொடங்கிய போது தம்முடைய வித்தியாசமான ஆக்சன் காரணமாக 6 - 7 மாதத்துக்கு மேல் விளையாட முடியாமல் ஓடி விடுவான் என்று பலரும் சொன்னதாக ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். மேலும் வித்தியாசமாக பவுலிங் செய்வதால் தமக்கு யாரும் அதிகமாக பயிற்சி கொடுக்கவில்லை என்றும் பும்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பலரும் என்னை நம்பினார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இந்த பவுலிங் ஆக்சன் காரணமாக நான் நீண்ட காலம் விளையாட மாட்டேன் என்று பலரும் நினைத்தார்கள். 6 - 7 மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என்று அவர்கள் கூறினார்கள். அதனால் பலர் எனக்கு பயிற்சி கொடுக்க முன் வரவில்லை. அது எனக்கு சாதகமாக அமைந்தது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் அதன் காரணமாக என்னை நானே நம்பி எனக்குத் தேவையான தீர்வுகளை சொந்த வழியில் கண்டறிய வேண்டிய நிலை எனக்கு உருவானது. அந்த வகையில் யாரும் என்னை மாற்றவும் விரும்பவில்லை. அதே சமயம் யாரும் எனக்கு எக்ஸ்ட்ரா தீர்வுகளும் கொடுக்கவில்லை. அது எனக்கு உதவி செய்தது.

எனவே என்னுடைய கெரியரை தாமதமாக 16 - 17 வயதில் தான் தொடங்கினேன். எனக்கு சாதாரண பயிற்சியும் கிடைக்கவில்லை. எனவே நான் தொலைக்காட்சிகளை பார்த்து என்னுடைய சொந்த வழியில் தீர்வுகளை கண்டறிந்தேன். இன்று வரை அது எனக்கு வேலை செய்கிறது. எப்போதும் நான் என்னுடைய சொந்த உள்ளுணர்வுகள் மற்றும் தைரியத்தை நம்பியிருக்கிறேன்" என்று கூறினார்.


Next Story