சஞ்சு சாம்சன் இப்படி ஒரு நிலைமையை சந்திப்பது முதல் முறையா? - உத்தப்பா கேள்வி


சஞ்சு சாம்சன் இப்படி ஒரு நிலைமையை சந்திப்பது முதல் முறையா? - உத்தப்பா கேள்வி
x
தினத்தந்தி 23 July 2024 4:32 PM GMT (Updated: 23 July 2024 5:12 PM GMT)

சஞ்சு சாம்சன் இப்படி கழற்றி விடப்படுவது புதிதல்ல என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவில்லை. அதேபோல் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்வாட் ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பிடிக்கவில்லை.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அந்த அணியில் கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அப்படி இந்தியா விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த அவருக்கு அடுத்ததாக நடைபெறும் இலங்கைத் தொடரில் வாய்ப்பு கொடுக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் இப்படி ஒரு நிலைமையை சந்திப்பது முதல் முறையா? என்று இந்திய முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சஞ்சு சாம்சன் இப்படி கழற்றி விடப்படுவது புதிதல்ல என்று தெரிவிக்கும் ராபின் உத்தப்பா இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"சஞ்சு சாம்சன் இப்படி ஒரு நிலைமையை சந்திப்பது முதல் முறையா? இந்த நிலைமையை அவர் சந்திப்பது இது கடைசி முறை என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய புள்ளி விவரங்கள் சிறப்பாக உள்ளது. இருப்பினும் தலைமைப் பொறுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அது கொஞ்சம் செட்டிலாகும் வரை நம்மைப் போன்ற ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்து செட்டிலாகத் தேவையான நேரத்தை கொடுக்க வேண்டும். சஞ்சு சாம்சன் மற்ற வீரர்களுடன் ஏற்பட்ட போட்டியால் வெளியேற்றப்படவில்லை. கண்டிப்பாக அவருக்கான நேரத்தில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படி வாய்ப்பு கிடைக்கும்போது அவர் அதை மிகச்சிறப்பாக செயல்பட்டு இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.


Next Story