ஐ.பி.எல். : கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டது ஏன்..? - சஞ்சீவ் கோயங்கா விளக்கம்


ஐ.பி.எல். : கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டது ஏன்..? - சஞ்சீவ் கோயங்கா விளக்கம்
x

லக்னோ அணியிலிருந்து ராகுல் விலகி இருந்தாலும் அவர் மீதான அன்பும் மரியாதையும் குறையாது என்று சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் ஆகியவை சமீபத்தில் நடந்தது. இந்த ஏலத்தில் கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் இடம் பெற்றிருந்தார். அவரை டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது லக்னோ அணியின் கேப்டனான லோகேஷ் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அவர் லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று கருத்துகள் நிலவின.

இந்நிலையில் கே.எல். ராகுல் தங்களது அணியிலிருந்து விலகி இருந்தாலும் அவர் மீதான அன்பும், பாசமும் குறையவில்லை என சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கான காரணம் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு: "கே.எல். ராகுல் இப்போது மட்டுமல்ல எப்போதுமே என்னுடைய குடும்பத்தில் ஒருவரை போன்றவர். கடந்த சில ஆண்டுகளாகவே எங்கள் அணியை அவர் மிகச்சிறப்பாக வழிநடத்தி வந்தார். தற்போது அவர் எங்களை விட்டு விலகினாலும் எப்போதுமே அவர் என் குடும்பத்தில் ஒருவரை போன்றவர்தான். அவரது திறமை மீது எனக்கு எப்போதும் சந்தேகம் வந்தது கிடையாது.

ஆனால் மைதானத்தில் நான் அப்படி கடுமையாக நடந்து கொண்டதற்கு சில காரணங்கள் இருந்தன. உணர்ச்சி பூர்வமாக இருந்த நேரத்தில் அதன் வெளிப்பாடாக நடந்து விட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அந்த நிகழ்வு எங்களது உறவை பாதிக்காது என்று நம்புகிறேன்.

லக்னோ அணியின் கேப்டனாக அவர் இருந்தபோது நிறைய உரையாடல்கள் இருந்தன. ஆனால் இனிவரும் காலங்களில் அவருடன் நிறைய உரையாடல் இருக்காது. ஆனாலும் அவர் மீதான அன்பும் மரியாதையும் கொஞ்சம் கூட குறையாது" என்று கூறினார்.


Next Story