ஐ.பி.எல்.: இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்திய விராட் கோலி


ஐ.பி.எல்.: இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்திய விராட் கோலி
x

image courtesy: PTI

தினத்தந்தி 27 May 2024 12:03 PM IST (Updated: 27 May 2024 1:46 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார்.

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி ஏறக்குறைய 2 மாத காலங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வந்த இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகையும், 2-வது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு 12.50 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அதேபோல இதர வீரர்களுக்கான பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

அதில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்களை 61.75 என்ற அபாரமான சராசரியில் குவித்தார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதற்காக அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆரஞ்சு தொப்பியும் பரிசாக வழங்கப்பட்டது. அதை விராட் கோலியின் சார்பாக கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக கடந்த 2016 சீசனில் 973 ரன்கள் விளாசிய விராட் கோலி ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். தற்போது இந்த சீசனையும் சேர்த்து விராட் கோலி மொத்தம் 2 ஆரஞ்சு தொப்பிகளை வென்றுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆரஞ்சு தொப்பிகளை வென்ற முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்துள்ளார்.

சச்சின் , ராபின் உத்தப்பா, கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் ஆகிய இந்திய வீரர்கள் தலா 1 முறை ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story