ஐ.பி.எல்.: சென்னை அணியின் கேப்டன்சி மாற்றத்தின்போது தோனி என்னிடம் கூறியது இதுதான் - கெய்க்வாட்

image courtesy: PTI
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் நியமிக்கப்பட்டார்.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
முன்னதாக ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 43 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை கடந்த வருடம் ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். அதோடு இந்த சீசனிலும் சென்னை அணியில் விளையாட உள்ளார். இருப்பினும் கடந்த சீசனில் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் விளையாடிய சென்னை அணியானது லீக் சுற்றோடு வெளியேறியது.
இந்நிலையில் இன்று முதல் இது உனது தலைமையிலான சிஎஸ்கே அணி என்று சொல்லி தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை தம்மிடம் ஒப்படைத்ததாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மேலும் களத்தில் அனைத்து விதமான முடிவுகளையும் நீ தான் எடுக்க வேண்டும் என்றும் தோனி கூறியதாகவும் கெய்க்வாட் கூறியுள்ளார்.
இது குறித்து கெய்க்வாட் பேசியது பின்வருமாறு:- "கடந்த வருடம் ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக என்னிடம் வந்த எம்.எஸ். தோனி, 'இந்த வருடம் நான் தலைமைத் தாங்கப் போவதில்லை. நீங்கள் வழி நடத்தப் போகிறீர்கள்' என்று சொன்னார். அதற்கு அவரிடம் முதல் போட்டியில் இருந்தே நான் கேப்டனாக இருக்க வேண்டுமா? உறுதியாகத்தான் சொல்கிறீர்களா? என்று கேட்டேன். அந்த வகையில் கேப்டனாக தயாராக எனக்கு சில நாட்கள் மட்டுமே கிடைத்தது.
ஆனால் 'இது உன்னுடைய அணி. நீ உன்னுடைய சொந்தமான முடிவுகளை எடுக்க வேண்டும். பீல்டிங் செட் செய்வதில் கூட தலையிட மாட்டேன். அழுத்தமான சூழலில் உதவி செய்ய வேண்டிய நிலை வந்தால் கூட அதை நீங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை' என்று தோனி சொன்னார். அந்த அளவுக்கு அவருடைய நம்பிக்கையை நான் பெற்றது எனக்கு தெரிகிறது" என்று கூறினார்.