ஐ.பி.எல். மெகா ஏலம்: 13 வயது இளம் வீரரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் தொடங்கியது.
ஜெட்டா,
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.
இந்நிலையில் 2-வது நாள் மெகா ஏலம் தொடங்கியது. இதில் முதல் வீரராக ரோவ்மன் பவலை கொல்கத்தா அணி ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய இளம் வீரரான பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
உள்ளூர் வீரரான அன்ஷுல் கம்போஜை ஏலத்தில் எடுக்க சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் சென்னை அணி ரூ. 3.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது.
ஸ்டீவ் சுமித், அல்சாரி ஜோசப், சிக்கந்தர் ராசா, பதும் நிசாங்கா, பிரண்டன் கிங், கஸ் அட்கின்சன், கைல் மேயர்ஸ், சர்பராஸ் கான், நவ்தீப் சைனி, ஜேசன் பெர்ஹண்ட்ராப், மேத்யூ ஷார்ட், போன்ற முன்னணி வீரர்களை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஓவர்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
Live Updates
- 25 Nov 2024 4:06 PM IST
தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரியான் ரிக்கல்டனை மும்பை இந்தியன்ஸ் ரூ. 1 கோடிக்கு வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 4:04 PM IST
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான ஷாய் ஹோப் மற்றும் இந்திய விக்கெட் கீப்பரான கே.எஸ். பாரத் இருவரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
- 25 Nov 2024 4:02 PM IST
ஆல் ரவுண்டரான நிதிஷ் ராணாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 4.2 கோடிக்கு வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 3:59 PM IST
இந்திய ஆல் ரவுண்டரான குருனால் பாண்ட்யாவை ஏலத்தில் எடுக்க பெங்களூரு - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெங்களூரு அணி ரூ. 5.75 கோடிக்கு வாங்கியது.
- 25 Nov 2024 3:56 PM IST
சென்னை அணியின் முன்னாள் வீரரான டேரில் மிட்செலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
- 25 Nov 2024 3:55 PM IST
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான மார்கோ ஜான்சனை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் போட்டியிட்டன. முடிவில் பஞ்சாப் ரூ. 7 கோடிக்கு அவரை வாங்கியது.
- 25 Nov 2024 3:53 PM IST
தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை ரூ. 3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 3:52 PM IST
பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான பாப் டு பிளெஸ்சிஸை ரூ. 2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 3:46 PM IST
முன்னணி வீரர்களான வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், ரகானே, மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.