ஐ.பி.எல்.: படிதாரை அவர்தான் கேப்டனாக பரிந்துரைத்திருப்பார் - இந்திய முன்னாள் வீரர்

image courtesy: PTI
விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக வராதது தமக்கு ஆச்சரியத்தை கொடுத்ததாக முகமது கைப் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கேப்டனான பாப் டு பிளெஸ்சிசை கழற்றி விட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முன்னதாக நடைபெற்ற ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களுரு நிர்வாகம் எடுக்கவில்லை. இதனால் விராட் கோலியே மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் விராட் கோலியை தாண்டி பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக வராதது தமக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்ததாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு விராட் கோலிதான் ரஜத் படிதாரை புதிய கேப்டனாக பரிந்துரை செய்திருக்கலாம் என்றும் கைப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நான் கொஞ்சம் ஆச்சரியமடைந்தேன். டு பிளேஸ்சிஸை அவர்கள் தக்க வைக்காததால் விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணியை வழி நடத்துவார் என்று நினைத்தேன். கேப்டனாக இல்லையென்றாலும் குறிப்பிட்ட வீரர்களை வாங்குவதற்கான பரிந்துரைகளை அணி நிர்வாகத்திற்கு கொடுப்பது அவருடைய வேலை. எனவே ரஜத் கேப்டனாக வந்ததன் பின்புலத்தில் விராட் கோலி இருப்பார். பெங்களூரு அணி 18 வருடங்களாக கோப்பையை வெல்லவில்லை.
ஆனாலும் அவர்கள் விராட் கோலியை இன்னும் தங்கள் அணியிலேயே வைத்துள்ளார்கள். அதுவே விராட் கோலி மீது பெங்களூரு அணி காட்டும் மரியாதையாகும். அதுவே பெங்களூரு அணியில் விராட் கோலியின் மதிப்பு ஆகும். 37 வயதாகும் விராட் கோலி தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தி இளம் வீரர் அணியை வழி நடத்துவதை விரும்புகிறார். ஆனால் இந்த பொறுப்பு படிதாருக்கு கடினமாக இருக்கும்" என்று கூறினார்.