ஐ.பி.எல்.2025: மெகா ஏலத்திற்கு முன் அணிகளின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன..? வெளியான தகவல்


ஐ.பி.எல்.2025: மெகா ஏலத்திற்கு முன் அணிகளின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன..? வெளியான தகவல்
x
தினத்தந்தி 26 July 2024 2:54 AM GMT (Updated: 26 July 2024 2:57 AM GMT)

ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எ.ல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்து தற்போதே பல்வேறு பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.

அதோடு அடுத்த ஆண்டு ஐ.பி.எ.ல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மெகா ஏலத்திற்கு முன்னதாக உரிமையாளர்களின் கூட்டமானது வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

அதற்கு முன்னதாக ஐபிஎல் மெகா ஏலம் நடத்துவது தொடர்பாக 10 அணிகள் உடன் நிர்வாகிகளை பிசிசிஐ சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. அந்த கூட்டத்தில் அணி நிர்வாகங்கள், பிசிசிஐ-யிடம் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு வீரர்களை எப்படி தேர்வு செய்வது? எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுப்பது? ஆர்டிஎம் கார்டு வசதி வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு அணிகளும் தங்களுடைய நிறை குறைகளை பிசிசிஐ இடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அதில் ஒட்டுமொத்த அணிகளும் தற்போது மெகா ஏலத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். தாங்கள் கஷ்டப்பட்டு அணியை கட்டமைத்து வீரர்கள் செட்டாவதற்குள் அடுத்த மெகா ஏலம் வந்து விடுகிறது. இதன் மூலம் பல வீரர்கள் அணியை விட்டு செல்லும் நிலை ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அணி நிர்வாகிகள், இதனை தடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இனி மெகா ஏலத்தை நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு அனைத்து ஐபிஎல் அணிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

இதே போன்று வீரர்களுக்கான சம்பளத்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள அணி நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சில இளம் வீரர்கள் குறைவான ஊதியத்தில் அணிக்குள் வந்து பின் தங்களுடைய திறமையை நிரூபித்து கூடுதல் பணத்திற்காக மற்ற அணிகளுக்கு செல்ல முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி வந்தனர். இதனை தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை ஊதியத்தை மாற்றி அமைக்க அணி நிர்வாகத்திற்கு உரிமையை தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும் வீரர்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைக்கும் போது அது வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என்றும் அது ஐபிஎல் நிர்வாகத்தின் வழியாகவே நடத்திக் கொள்ளலாம் என்றும் அணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் மும்பை அணி தரப்பில் 6 வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், கேகேஆர் அணி தரப்பில் ஒரேயொரு வீரரை மட்டும் தக்க வைத்து கொள்ள அனுமதிவிட்டு 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைகள் அளித்துள்ளன. மறுமுனையில் பஞ்சாப், லக்னோ, குஜராத், டெல்லி உள்ளிட்ட அணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 6 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள அனுமதித்தால், உலகின் தலைசிறந்த 60 வீரர்கள் ஏலத்திற்கே வராமல் ஒதுக்கப்படுவார்கள்.

குறிப்பாக டாப் 25 முதல் 30 இந்திய வீரர்கள் ஏலத்திற்கு வர மாட்டார்கள். இதனால் 4 வீரர்கள் என்ற எண்ணிக்கையிலேயே வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அணிகளும் பரிந்துரைத்துள்ளன. அதிலும் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என்றும், 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என்ற வகையில் அனுமதிக்கலாம் என்றும் கூறியுள்ளன.


Next Story