ஐ.பி.எல்.2025: போட்டிகளில் விளையாட ஒவ்வொரு அணிகளும் பயணிக்கும் தூரம் எவ்வளவு..? விவரம்

இதில் குறைந்தபட்சமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8,536 கி.மீ. பயணம் செய்கிறது.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் 'பி' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் தலா 2 முறையும், எதிர்பிரிவில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை, மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூரில் அதிகபட்சமாக அணிகள் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடும்.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதி அவற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து 3-வது, 4-வது இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில், முதல் தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் மல்லுக்கட்டும். இதில் வெற்றியை வசப்படுத்தும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டும்.
இதில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் 10 அணிகளும் லீக் போட்டிகளில் விளையாட எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அதிகபட்சமாக பெங்களூரு அணி 17,084 கி.மீ. தூரமும், குறைந்தபட்சமாக ஐதராபாத் 8,536 கிலோ மீட்டரும் பயணம் செய்கின்றன.
அந்த பட்டியல்:-
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 17,084 கி.மீ.
2. சென்னை சூப்பர் கிங்ஸ் -16184 கி.மீ.
3. பஞ்சாப் கிங்ஸ் - 14,341 கி.மீ.
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 13,537 கி.மீ.
5.ராஜஸ்தான் ராயல்ஸ் - 12,730 கி.மீ.
6. மும்பை இந்தியன்ஸ் - 12,702 கி.மீ.
7. குஜராத் டைட்டன்ஸ் - 10,405 கி.மீ.
8. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 9,747 கி.மீ.
9. டெல்லி கேப்பிடல்ஸ் - 9,270 கி.மீ.
10. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 8,536 கி.மீ.