ஐ.பி.எல். 2025: டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் விலகல்... காரணம் என்ன..?

image courtesy: twitter/@IPL
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் டெல்லி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வரும் 24ம் தேதி நடக்கிறது.
இந்த தொடர் தொடங்க இன்னும் சுமார் 10 நாட்களே உள்ள நிலையில், டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவது என்ற மிகக்கடினமான முடிவை நான் எடுத்துவிட்டேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமும், அவர்களின் ஆதரவாளர்களிடமும் நான் நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். நான் சிறுவயத்தில் இருந்தே என் நாட்டிற்காக விளையாட வேண்டும் என கனவு கண்டேன்.
இந்த நிலையில், நான் விரும்பும் விளையாட்டை விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நம்பும் மக்களின் வழிகாட்டுதலுடன், இந்த முடிவை தீவிரமாக பரிசீலிக்க நேரம் எடுத்து கொண்டேன். இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு இது மிகவும் முக்கியமான நேரம், வரவிருக்கும் தொடருக்குத் தயாராவதற்கு நான் முழுமையாக அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
என் நாட்டிற்காக விளையாடுவது எனது முன்னுரிமையாகவும் கவனமாகவும் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கும் எனக்குக் கிடைக்கும் ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. ஹாரி புரூக்-குக்கான மாற்று வீரரை டெல்லி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை.