ஐ.பி.எல். 2025: ஏலப்பட்டியலில் இணைந்த மேலும் 3 வீரர்கள்.. விவரம்


ஐ.பி.எல். 2025: ஏலப்பட்டியலில் இணைந்த மேலும் 3 வீரர்கள்.. விவரம்
x
தினத்தந்தி 23 Nov 2024 8:23 AM IST (Updated: 23 Nov 2024 1:00 PM IST)
t-max-icont-min-icon

முன்னதாக ஐ.பி.எல். மெகா ஏலப்பட்டியலில் 574 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

மும்பை,

18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 14-ந் தேதி தொடங்கி மே 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக வீரர்களுக்கான மெகா ஏலம் நாளை மற்றும் நாளை மறுநாள் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் மதியம் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.

மெகா ஏலப்பட்டியலில் மொத்தம் 574 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

இந்நிலையில் நாளை ஐ.பி.எல். ஏலம் நடைபெற உள்ள வேளையில் ஐ.பி.எல். நிர்வாகம் புதிதாக 3 வீரர்களை சேர்த்து வீரர்களின் எண்ணிக்கையை 577 ஆக உயர்த்தியுள்ளது. அதன்படி ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து), நேத்ராவல்கர் (அமெரிக்கா) மற்றும் உள்ளூர் வீரரான ஹர்திக் தாமோர் ஆகியோர் புதிதாக ஏலப்பட்டியலில் இணைந்துள்ளனர்.


Next Story