சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்; முதல் வங்காளதேச வீரராக வரலாற்று சாதனை படைத்த முஷ்பிகுர் ரஹீம்


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்; முதல் வங்காளதேச வீரராக வரலாற்று சாதனை படைத்த முஷ்பிகுர் ரஹீம்
x

Image Courtesy: AFP

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

டாக்கா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.1 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்திருந்தது. கைல் வெர்ரியன்னே 18 ரன்களுடனும், வியான் முல்டர் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 308 ரன்களை குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்ரியன்னே சதம் அடித்து (114 ரன்) அவுட் ஆனார். இதையடுத்து 202 ரன்கள் பின்னிலையுடன் வங்காளதேசம் தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் ஷத்மான் இஸ்லாம் 1 ரன்னிலும், ஷாண்டோ 23 ரன்னிலும், மொமினுல் ஹக் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் களம் இறங்கினார்.

இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 27.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 38 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹீம் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேச அணி இன்னும் 101 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் முதல் வங்காளதேச வீரராக வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களை கடந்த முதல் வங்காளதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வங்காளதேச வீரர்கள்;

முஷ்பிகுர் ரஹீம் - 6003 ரன்*

தமிம் இக்பால் - 5134 ரன்

ஷகிப் அல் ஹசன் - 4609 ரன்

மொமினுல் ஹக் - 4269 ரன்

ஹபிபுல் பஷார் - 3026 ரன்


Next Story