பிங்க் பந்தை இந்திய பவுலர்கள் சரியாக பயன்படுத்தவில்லை - சுனில் கவாஸ்கர்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 8 விக்கெட்டுகளை இழந்து 332 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், அடிலெய்டில் தொடங்கியுள்ள பிங்க் பந்து டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது குறித்து இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
இந்திய பேட்ஸ்மேன்கள் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதே போல் பவுலர்கள் சில பந்துகளை ஆப்ஸ்டம்புக்கு வெளியே வீசி விட்டு, பிறகு ஸ்டம்புக்குள் வீசும் போது விக்கெட் கிடைக்க வாய்ப்பு உண்டு. முதல் டெஸ்டில் மெக்ஸ்வினி, லபுஸ்சேன் ஆகியோரது விக்கெட்டை பும்ரா இவ்வாறு வீழ்த்தினார். அதே போல் இந்த போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். உண்மையில் பிங்க் பந்தை இந்திய பவுலர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.