ஜிம்பாப்வேவை 134 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்ற இந்தியா
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன், ரிங்கு சிங் 48 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இன்னோசென்ட் கயா மற்றும் வெஸ்லி மதவாரே ஆகியோர் களம் இறங்கினர். இதில் கயா 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய பிரைன் பென்னட் 26 ரன், டியான் மியர்ஸ் 0 ரன், சிக்கந்தர் ராசா 4 ரன், ஜொனாதன் காம்ப்பெல் 10 ரன், கிளைவ் மடாண்டே 0 ரன், வெலிங்டன் மசகட்சா 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய மதவாரே 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து லூக் ஜாங்வே மற்றும் பிளெசிங் முசரபானி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அவேஷ் கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட், ரவி பிஷ்னோய் 2 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.