இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: பாண்டிங் கருத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி


இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: பாண்டிங் கருத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி
x
தினத்தந்தி 15 Aug 2024 10:57 AM GMT (Updated: 15 Aug 2024 4:38 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று பாண்டிங் கூறியிருந்தார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது.

அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. அதனால் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இம்முறை நிச்சயம் ஆஸ்திரேலிய அணி3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாண்டிங்கின் இந்த கருத்திற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், "கடந்த சுற்றுப்பயணத்தின்போது இந்தியா அவர்களை இருமுறை வீழ்த்தியதால் ஒரு சதாப்த தோல்விக்கு பழிவாங்க ஆஸ்திரேலிய அணி தீவிரமாக காத்திருக்கும். எனவே இம்முறை இந்திய அணிக்கு எதிராக அவர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இருப்பினும் இந்திய வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

இது இரு அணிகளுக்கும் கடினமான தொடராக இருக்கும். அதனை பார்க்க அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். இந்திய அணி அவ்வளவு எளிதாக இந்த தொடரை விட்டுக் கொடுத்து விடாது. இம்முறையும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி அடிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இந்திய அணியிடம் உள்ளன" என்று கூறினார்.


Next Story