இந்தியா- பாகிஸ்தான் போட்டி: சிறிது நேர மழைக்குப்பின் போட்டி தொடக்கம்
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நியூயார்க்
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நியூயார்க்கில் நடைபெற்று வரும் 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்தது.
அதேவேளையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று வெற்றி பயணத்தை தொடர இந்தியாவும், தனது வெற்றிக்கணக்கை தொடங்க பாகிஸ்தானும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
முன்னதாக இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் , விராட் கோலியும் களமிறங்கினர். முதல் ஓவரை சாகின் அப்ரிடி வீசினார். முதல் ஓவர் முடிவில் இந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்த பட்டது.
தற்போது, மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.