அந்த விஷயத்தில் தோனி மாஸ்டர் - யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பாராட்டு


அந்த விஷயத்தில் தோனி மாஸ்டர் - யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பாராட்டு
x
தினத்தந்தி 12 Jan 2025 5:31 PM IST (Updated: 12 Jan 2025 6:19 PM IST)
t-max-icont-min-icon

மகேந்திரசிங் தோனியை யோக்ராஜ் சிங் பலமுறை விமர்சித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். இருப்பினும் அவரால் முன்பு போல் அசத்த முடியவில்லை. அதன் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர், 2019ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிதான் யுவராஜ் சிங்கை கழற்றி விட்டு அவரின் கெரியரை முடித்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பலமுறை விமர்சித்துள்ளார். தோனிதான் தம்முடைய மகனின் கெரியரை அழித்ததாகவும் அவர் பகிரங்கமாக பேசியதை மறக்க முடியாது. அதனால் தோனியை தாம் எப்போதும் மன்னிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யோக்ராஜ் சிங் திடீரென தோனியை பாராட்டியுள்ளார். குறிப்பாக சூழ்நிலைகளைப் படித்து அதற்கு தகுந்தாற்போல் பவுலர்களுக்கு ஐடியா கொடுப்பதில் தோனி மாஸ்டர் போன்ற கேப்டன் என்று அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் ஒரு போட்டியில் மிட்சேல் ஜான்சன் பவுன்சர் பந்தால் அடித்தபோது அடுத்த பந்திலேயே சிக்சரை நொறுக்கி பதிலடி கொடுத்த தோனி பயமற்றவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "மற்ற வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை கொடுக்கும் தோனியை மிகவும் உத்வேகம் கொடுக்கக்கூடிய கேப்டனாக நான் பார்க்கிறேன். ஆடுகளத்தை நன்றாக படித்து அதற்கேற்றார் போல் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை பவுலரிடம் அவர் சொல்வார். அதில் அவர் மாஸ்டர். அதுவே தோனியை பற்றிய சிறந்த விஷயமாகும்.

அவர் பயமற்றவராக இருக்கிறார் என்ற விஷயத்தை நான் மிகவும் விரும்புகிறேன். உங்களுக்கு நினைவிருந்தால் ஒருமுறை ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் வீசிய பவுண்டர் தோனியின் தலையில் பட்டது. அதை வாங்கிக் கொண்ட தோனி கொஞ்சமும் நகரவில்லை. அப்படியே நின்ற அவர் அடுத்த பந்தில் சிக்சர் அடித்தார். அந்த வகையில் தோனி போல பதிலடி கொடுக்கக் கூடிய சிலர் மட்டுமே இருக்கிறார்கள்" என்று கூறினார்.


Next Story