நான் நீண்ட நேரம், பெரிய இன்னிங்ஸ் விளையாட விரும்புகிறேன் - டிராவிஸ் ஹெட் பேட்டி
பிரிஸ்பேன் டெஸ்டில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது.
கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர் . இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டை இழந்து 405 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் அலெக்ஸ் கேரி 45 ரன்னுடனும், ஸ்டார்க் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினர். டிராவிஸ் ஹெட் 152 ரன், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன் எடுத்தனர். இந்நிலையில், இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர் டிராவிஸ் ஹெட் அளித்த பேட்டியில் கூறியதாவது, அடிலெய்ட் போட்டியில் அடித்த சதத்துக்கு பின் இதை செய்தது மிகவும் ஸ்பெஷல். இவை அனைத்தும் நேர்மறையாக இருந்து களத்தில் நேரத்தை செலவிடுவதைப் பற்றியதாகும். எங்கள் டாப் 3 பேட்ஸ்மேன்கள் புதிய பந்துக்கு எதிராக நன்றாக விளையாடினார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அவர்களது ஆட்டத்தினாலேயே என்னால் மிடில் ஆர்டரில் அதிரடியாக, எளிதாக விளையாட முடிகிறது. நான் நீண்ட நேரம் பெரிய இன்னிங்ஸ் விளையாட விரும்புகிறேன். பும்ரா கடினமாக பந்து வீசுவதால் அவரை எதிர்கொள்வது எப்போதும் கடினம். ஸ்மித் தன்னுடைய கால்களை நகர்த்தி நன்றாக விளையாடினார். அவருடைய ஆட்டம் மறுபக்கம் எனக்கு நன்றாக விளையாட உதவியது.
இந்தியாவுக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளதால் அவர்களின் ப்ளூ பிரிண்ட் என்னிடம் இருக்கிறது. சுழலுக்கு எதிராக துவங்குவது பதற்றமாக இருந்தாலும் ஜடேஜாவை இன்று நன்றாக எதிர்கொண்டேன். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு நன்றாக அடித்தளத்தை அமைத்துள்ளார்கள். இலங்கைக்கு எதிராகவும் நன்றாக செயல்பட்டு நாங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வோம் என்று நம்புகிறோம். ஸ்டீவ் ஸ்மித் பார்முக்கு திரும்பியதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.